November 25, 2020

பிரம்மாண்ட ஆரம்ப பாடலுடன் துவங்கப்பட்ட விஷால், ஆர்யா படப்பிடிப்பு!!!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில்  முன்னனி நடிகர்களான ஆர்யாவும், விஷாலும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார்.

ஆர்யா தற்போது டெடி திரைப்படத்திலும், 3 தேவ் என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். இதே போல விஷால் துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும், சக்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆர்யாவும், விஷாலும் இணையப் போகும் இந்த படத்திற்கு பெயர் மற்றும் பிற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் இந்தப் படம் ஆர்யாவுக்கு 32வது படமாகும். அதே போல விஷாலுக்கு இது 30வது படமாகும். இவர்களுடன் டப்ஸ்மேஷ் புகழ் மிருனாளினியும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதற்கிடையே இன்று படத்திலிருந்து வெளிவரும் முதல் பாடலை படம்பிடித்துள்ளனர். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிருந்தா மாஸ்டரின் நடன அமைப்பில், அறிவு வரிகளில் அமைந்த இந்தப் பாடலுக்காக மிகவும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: