October 29, 2020

45வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் சூர்யா!!!

1975ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி, நடிகர் சிவக்குமார் மற்றும் லஷ்மி தம்பதியினருக்கு முதல் மகனாக பிறந்தார் சூர்யா. சரவணன் என்ற இயற் பெயர் கொண்ட சூர்யா சென்னையிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை முடித்தார்.

சூர்யா தனது தந்தை நடிகர் சிவக்குமாருடன்

திரைத்துறையில் நுழைவதற்கு முன் 8 மாதங்கள் ஒரு ஆடை ஏற்றுமதி தொழிற்சாலையில் பணிபுரிந்த சூர்யா, அனைவருடன் சமமாக பழக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடிகர் சிவக்குமாரின் மகன் என்பதைச் சொல்லாமலேயே மறைத்து அங்கு பணிபுரிந்தார்.

திரைத்துறையின் மீது பெரிய ஆர்வமில்லாத காரணத்தால் இயக்குநர் வசந்த் ’ஆசை’ படத்திற்கு அழைப்பு விடுத்த போதும் ஏற்க மறுத்து விலகினார்.

பின்னர் வசந்த் இயக்கத்திலேயே 1997ஆம் ஆண்டு ’நேருக்கு நேர்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் சூர்யா.

நேருக்கு நேர்

பின்னர் காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  

பிரண்ட்ஸ்

தொடர்ந்து நடித்து வந்தாலும் சூர்யாவின் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைத்த படமாக இயக்குநர் பாலாவின் ’நந்தா’ திரைப்படமே அமைந்தது.

நந்தா

அதற்குப் பிறகு உன்னை நினைத்து, காக்க காக்க, பிதாமகன், பேரழகன் என வெவ்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்த சூர்யா ’சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்திற்குப் பிறகு இளைஞிகள் மத்தியில் காதல் நாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.

சில்லுன்னு ஒரு காதல்

அதற்குப் பிறகு சூர்யா நடித்த பெரும்பாலான படங்கள் சூர்யாவிற்கு வெற்றிப் படங்களாகவே அமைந்தது.

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், 7ஆம் அறிவு, மாற்றான், சிங்கம் 2, அஞ்சான், தானா சேர்ந்த கூட்டம், காப்பான் எனப் பல படங்கள் சூர்யாவிற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

சிங்கம்

நடிகர் சிவக்குமாரின் மகனாக இருந்தாலும் எந்தவொரு இடத்திலும் அதை முன்னிறுத்தி வாய்ப்புத் தேடாத சூர்யா, தனது கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

 முன்னணி நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர், திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பலருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். சூர்யா ’அகரம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பலருக்கும் கல்வியையும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

தானா சேர்ந்த கூட்டம்

இதற்கிடையே இந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் ’சூரரை போற்று’ மற்றும் ’தி நம்பி எபெஃக்ட்’ திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.

1975ஆம் ஆண்டு பிறந்த சூர்யா இன்று தனது 45வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ’மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற தனது வசனத்தால் மக்கள் மனதில் மாற்றத்தையும் நம்பிக்கையையும் விதைத்த கலையுலக நாயகன் சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

%d bloggers like this: