October 21, 2020

தமிழில் உருவாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்

சிலுக்கு சுமிதா என்பவர் 80களின் மிகவும் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகை ஆவார். விஜயலட்சுமி வட்லபட்லா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை சில்க் சுமிதா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த “வண்டிச்சக்கரம்” எனும் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான வர். இந்த திரைப்படத்தில் சிலுக்கு என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் சிலுக்கு சுமிதா என்று அழைக்கப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் 450 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பிறகு 2011ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து “தி டர்டி பிக்சர்” என்னும் திரைப்படம் ஹிந்தியில் வெளியானது. இந்த திரைப்படத்தை ஏக்தா கபூர் அவர்கள் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிலுக்கு சுமிதாவாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார். இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் இந்த படத்தின் மீது சிலுக்கு சுமிதாவின் குடும்பத்தினர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து இதன் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இது சிலுக்கு சுமிதாவின் வாழ்க்கை திரைப்படம் அல்ல என்று கூறியிருந்தார்.

2013ஆம் ஆண்டு கன்னட மொழியில் சிலுக்கு சுமிதாவின் வாழ்க்கையைப்பற்றிய திரைப்படமாக “டர்டி பிக்சர்: சிலுக்கு சக்கத் ஹாட்” என்ற திரைப்படம் வெளியானது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணா மாலிக் அவர்கள் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார். இது கர்நாடகாவில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இதே 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் “கிளைமாக்ஸ்” என்னும் தலைப்பில் சிலுக்கு சுமிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியானது. இதில் சிலுக்குசுமிதாவாக சனாகான் அவர்கள் நடித்திருந்தார்.

தற்போது சிலுக்கு சுமிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் தமிழில் தயாராக போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தை இயக்கிய கே.எஸ். மணிகண்டன் அவர்கள் இயக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு “அவள் அப்படித்தான்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிலுக்குசுமிதாவாக நடிக்கப் போவது யார் என்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

%d bloggers like this: