November 30, 2020

பிரசன்னாவின் “18 வருட கலைப்பயணத்தை” பாராட்டும் பிரபலங்களும் ரசிகர்களும்!!!

தமிழ் திரைப்படத்துறையில் இமேஜ் வளையத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்கள் அரிதானவர்கள்.

அதிலும் நாயகன், இரண்டாம் கதாநாயகன், கதையின் நாயகன், துணைக் கதாபாத்திரம், நகைச்சுவை கலந்த கதாபாத்திரம், எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம், ஸ்டைலிஷான வில்லன், தர லோக்கலான வில்லன் என ஒரு நடிகருக்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் உண்டோ அனைத்திலும் கதாபாத்திரத்துக்குத் தகுந்தார் போல் உடலளவிலும் உள்ளத்தாலும் முழுமையாக உருமாறி சிறந்த நடிப்பைக் கொடுக்கும் கலைஞர்கள் மிகவும் அரிதானவர்கள். அத்தகைய மிக அரிதான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பிரசன்னா.

புகழ்பெற்ற இயக்குநர் மணிரத்னம் அவர்களின் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுசி கணேசன் இயக்கி 2002ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வெளியான “ஃபைவ் ஸ்டார்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. ஐந்து முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்றாலும் நடிகர் பிரசன்னாவின் கதாபாத்திரம்தான் படத்தின் கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்குக் கூடுதல் முக்கியத்துவத்துடன் அமைந்திருந்தது.

அதன்பிறகு, 2004இல் வெளியான இயக்குநர் ராதாமோகனின் அறிமுகப் படமான ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் நாயகனாக நடித்தார் பிரசன்னா. பிரகாஷ் ராஜ் தயாரித்திருந்த இந்தப் படம் பரவலான வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக பிரசன்னாவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

அதனை தொடர்ந்து, கண்ட நாள் முதல், அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு, முரண், நாணயம், பாணா காத்தாடி, முப்பரிமாணம், துப்பறிவாளன், திருட்டு பயலே 2, மாஃபியா போன்ற படங்களின் மூலம் தனது பலவித பரிமாணங்களை திரையில் காட்டி, விருதுகளையும் குவித்து, தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழியிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாத் தரப்பு ரசிகர்களிடமும் திரைப்பட ஆர்வலர்களிடமும் திறமை வாய்ந்த நடிகர், இமேஜ் பார்க்காமல் நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேடிச் சென்று நடிப்பவர் என்றெல்லாம் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் பிரசன்னா இன்று தனது 18 வருட கலை வாழ்க்கை பயணத்தை கொண்டாடி வருகிறார். அவரது கலை வாழ்க்கை பயணத்தை பாராட்டும் விதமாக 18 வருட கலை வாழ்க்கையை சிறு காணொளியாக உருவாக்கியுள்ளனர் ரசிகர்கள்.

முன்னணி நடிகர்களான நடிகர் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ’18 இயர்ஸ் ஆஃப் பிரசன்னா’ என்ற ஹேஷ்டேகின் மூலம் அந்த காணொளியை வெளியிட்டு பிரசன்னாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார். அவரை தொடர்ந்து, நடிகர் சிபிராஜ், ஆர்யா, நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் என்று பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ’18 இயர்ஸ் ஆஃப் பிரசன்னா’ என்ற ஹேஷ்டேகின் மூலம் தெரிவித்து அதனை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

%d bloggers like this: