November 25, 2020

அக்டோபர் 1! ‘நடிகர் திலகம்’ பிறந்தநாள் அன்று சிறப்பான தகவலுக்கு தயாராகுங்கள்!!!

1952ஆம் ஆண்டு கலைஞர் அவர்களின் வசனத்தில் வெளிவந்த “பராசக்தி” என்ற திரைப்படத்தில் குணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அனைத்து மக்களின் மனங்களையும் கவர்ந்து, இன்று தமிழ் திரைப்பட உலகின் ஆசானாக போற்றப்படுபவர் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் அவர்கள். 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியன்று பிறந்தவர் நடிகர் திலகம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என்று 5 மொழிகளிலும் நடித்து நடிப்பின் உச்சம் என்று கருதப்படுபவர். இவரது நடை, நடிப்பு, பாடி லாங்குவேஜ் என்று அந்த கதாப்பாத்திரமாகவே தன்னை பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டவர். இவர் மொத்தம் 288 திரைப்படங்கள் நடித்துள்ளார். ஒவ்வொன்றுமே ஒவ்வொரு சிறப்பை கொண்டதாகும். இவர் நடிப்பில் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் தான் அனைத்து நடிகர்களின் பாட புத்தகம் என்று சொல்ல வேண்டும். அதில், ‘வானம் பொழிகிறது பூமி விளைகிறது’ என்று தொடங்கும் வசனம் அன்றும் இன்றும் என்றும் அவரது நடிப்பை உலகுக்கு பறைசாற்றுவதாகும்.

தனது ஒப்பற்ற நடிப்பிற்காக கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், சேவாலியர், தாதா சாஹிப் பால்கே விருது, என்டிஆர் தேசிய விருது, தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் ஃபிலிம் ஃபேர் விருதுகள் என்று பற்பல விருதுகளை குவித்துள்ளார். சர்வதேச அளவிலும் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகம் அவரது கலைவாழ்க்கையை கௌரவிக்கும் பொருட்டு டாக்டர் பட்டம் வழங்கியது.

இத்தனை சிறப்புகளை பெற்ற ‘நடிகர் திலகம்’ அவர்கள் 2001ம் ஆண்டு ஜூலை 21 அன்று மறைந்தார். எந்த ஒரு அரசு பொறுப்பிலும் பதவியிலும் இல்லாத போதும் அவரது கலை வாழ்க்கையை போற்றும் வகையில் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்தது தமிழக அரசு. அதுமட்டுமின்றி அவருக்கு சிலையும் நிறுவியுள்ளனர்.

நடிகர் பிரபு, விக்ரம் பிரபு என்று சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தினர், நடிகர் திலகம் அவர்களின் பிறந்தநாளின் போது ஒவ்வொரு ஆண்டும் பலவித சிறப்பான நிகழ்ச்சிகளை மேற்கொண்டு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோன்று, வரும் வியாழக்கிழமை அன்று சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், சிவாஜி அவர்களின் பேரனும் நடிகர் பிரபு அவர்களின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு தன் டிவிட்டர் பக்கத்தில் ‘சிவாஜி கணேசன்’, ‘நடிகர் திலகம்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் அறிவிப்பு ஒன்றை சிறு காணொளியின் மூலம் பகிர்ந்துள்ளார்.

அந்த காணொளியில், நடிகர் பிரபு, கமல்ஹாசன், சத்யராஜ், பாக்யராஜ் மற்றும் ராதிகா ஆகியோர் உள்ளனர். விக்ரம் பிரபு கூறியுள்ளது யாதெனில், “அக்டோபர் 1! இந்த சிறப்பான நாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதின் மூலம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு அனைத்து கட்டுப்பாடுகளுடன் விழாவில் சற்று மாறுப்பட்டுள்ளது ஆனால் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. அக்டோபர் 1ஆம் தேதி காலை 8 மணிக்கு ஜீ தமிழில் சிறப்பானதை பார்க்க தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

%d bloggers like this: