November 1, 2020

அருண்ராஜா காமராஜின் 3வது தனிப்பாடலான “கண்மணியே” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பரத்!!!

முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து சின்னத்திரையில் கலக்கியவர் அருண்ராஜா காமராஜ். தற்பொழுது தமிழ் திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், நகைச்சுவை கலைஞர், இயக்குநர் என பன்முக திறமைக்கொண்டு விளங்குகிறார் அருண்ராஜா காமராஜ்.

‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’, ‘மரகத நாணயம்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்த அருண்ராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி மற்றும் பாடி உலகளவில் அறியப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான, ‘கனா’ படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்குநர் அவதாரம் எடுத்தார். சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் அருண்ராஜா காமராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா ஊரடங்கின் போது தன்னுடைய ஏ.ஆர்.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் யூ டியூப் சேனல் வழியாக முன்னதாக ‘கண்ணக்குழி அழகே’ என்ற இசை ஆல்பத்தை அவரே இயக்கி பாடல்வரிகளையும் எழுதி வெளியிட்டார். அதில் கணேசன் சேகர் அவர்கள் இசை அமைக்க, பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் பாடலை பாடினார். இந்த பாடல் வைரலாகி ஹிட்டான நிலையில் அவர் அண்மையில் ‘சே’ என்ற மற்றொரு பாடலையும் வெளியிட்டு அசத்தினார்.

அதனை தொடர்ந்து, தனது ஆர்க் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தளத்தில் வெளியாக உள்ள 3வது தனிப் பாடல் குறித்த சிறப்பான அப்டேட் ஒன்றையும் ஏ.ஆர்.கே நிறுவனத்தின் மூலம் அவர் அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில், இந்த பாடல் எல்லா வகையிலும் முன்பு வெளியான பாடல்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும், அந்த 3வது பாடல் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று ஏ.ஆர்.கே எண்டர்டெயின்மெண்ட்டின் 3வது தனிப்பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் பரத் அவர்கள் வெளியிட்டு அறிவிப்பு ஒன்றையும் பகிர உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தனர். இதில் பரத் மற்றும் கார்த்திகா பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, நடிகர் பரத் அவர்கள் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கண்மணியே’ என்ற ஹேஷ்டேகின் மூலம் “ஏ.ஆர்.கே எண்ட் கம்பெனியின் 3வது தனிப்பாடல் ‘கண்மணியே’ என்பதில் பங்கு கொண்டதில் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளது. நாளை முதல் ஆடியோ வெளியாகவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதில் நடிகர் பரத் மற்றும் கிருத்திகா பாபு நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கணேசன் சேகர் இசையில் பாடலை எழுதி இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.

%d bloggers like this: