November 25, 2020

“கமல்ஹாசன் 232” படத்திற்காக ரசிகர்கள் உருவாக்கிய மோஷன் போஸ்டர்!!! பகிர்ந்து மகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்!!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தன்னுடைய முதல் படமான ‘மாநகரம்’ படத்தை மிகவும் வித்தியாசமாக இயக்கி ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய ‘கைதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும், இரண்டு திரைப்படத்திலுமே தன்னுடைய திறமையை நிரூபித்து வந்த லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மூன்றாவது படமான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தினை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதில், ஆண்டவருக்கு நன்றி என்று குறிப்பிட்டு ‘எவனென்று நினைத்தாய்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் உலகநாயகன் கமல்ஹாசனின் 232வது படத்தை இயக்க உள்ளதாகவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது என்றும் கூறினார். மேலும் அனிருத் இசையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தக்கட்ட அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் இயக்கவிருக்கும் “கமல்ஹாசன் 232″வது திரைப்படத்திற்காக ரசிகர்கள் உருவாக்கிய மோஷன் போஸ்டரை வெளியிட்டு அதன் இணைப்பையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

%d bloggers like this: