November 30, 2020

சிலம்பரசனின் மாநாடு படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்குகிறது

சிலம்பரசன் நடிப்பில் புதிதாக எடுக்கப்பட்டு வரும் “மாநாடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இதன் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இது சிம்பு ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

125 கோடி செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் மாநாடு திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். அரசியல் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் அப்துல் காலிக் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு எதிரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இவர்களோடு கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள். வெங்கட் பிரபு அவர்கள் இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா அவர்கள் இசை அமைத்து வருகிறார்.

தற்போது திண்டுக்கல்லில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வரும் புதிய திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு மாத குறுகிய காலத்திற்குள் எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் என படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு நவம்பர் மாதத்தில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: