October 29, 2020

கொட்டாச்சியின் புதிய குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!!!

நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி இயக்க இருக்கும் புதிய குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

இறைமகன் என்ற தலைப்பு கொண்ட இந்த குறும்படத்தை நிகில் முருகன் அவர்கள் கிளாப் போர்ட் மீடியா மற்றும் பிளாக்வுல்ஃப் புரொடக்சன்ஸ் நிறுவனங்களின் மூலம் தயாரித்திருக்கிறார். கேதார் அவர்களின் இசையமைப்பில் வெளிவர இருக்கும் இந்த குறும்படத்திற்கு எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள் வசனம் எழுதியுள்ளார். விரைவில் இந்த குறும்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருபவர் கொட்டாச்சி அவர்கள். இவர் விஜய், அஜித் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களோடு நடித்திருக்கிறார். இவருடைய மகள் மானஸ்வி 2018ஆம் ஆண்டு வெளிவந்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

நகைச்சுவை நடிகராக இருந்த கொட்டாச்சி அவர்கள் தற்போது இயக்குநராக மாறியிருக்கிறார். வறண்ட விழிகள் மற்றும் வலியும் வழியும் ஆகிய இரண்டு குறும்படங்களை இவர் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு குறும்படங்களுமே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு இயக்குநர் வாழ்வில் இருக்கும் வலியையும் வழியையும் பற்றி எடுத்துரைக்கும் விதமாக அமைந்த குறும்படம் வலியும் வழியும். இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பிரபு சாலமன் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

தீண்டாமை பற்றிய கதையை மையமாக கொண்ட குறும்படம் வறண்ட விழிகள். இதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் வெளியிட்டிருந்தார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் கொட்டாச்சியின் யூடியூப் வலைதளமான மான் வலை சேனலில் இந்த படங்களை காண முடியும்.

இவர் இயக்கிய இரண்டு குறும்படங்களுமே நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் இவர் இயக்கப் போகும் புதிய குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இறைமகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: