December 3, 2020

“சூரரை போற்று” ஓடிடி வெளியீடு பற்றி இயக்குநர் பாரதிராஜா விளக்கம்!!!

நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில், சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா அவர்களின் 2டி நிறுவனம் தயாரித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் “சூரரை போற்று”. இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

திரையரங்கில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் திடீரென்று சூர்யா அவர்கள் அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30 அன்று நேரடியாக வெளிவர உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சூர்யா அவர்களின் ‘சிங்கம்’ திரைப்படத்தின் மூன்று பாகங்களையும் இயக்கிய ஹரி அவர்கள் கூட சில தினங்களுக்கு முன்னாள் சூர்யா அவர்களின் இந்த ஓடிடி முடிவில் மறுபரிசீலனை செய்யுமாறு அறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் சூர்யா அவர்களின் “சூரரை போற்று” திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றி ஒரு பதிவினைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளது யாதெனில், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என்று அனைவரும் தங்களது படைப்பு தியேட்டரில் வெளியாகி பாமரமனின் பார்வைக்கும் சென்று பாராட்டை பெற வேண்டும் என்று தான் வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன் பல சிக்கல்களை சந்திக்கிறது. இதனால் பெரிதும் தயாரிப்பாளர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

அப்படி பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் ஓடிடி. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இதை தவிர்க்க முடியாது. அதேபோன்று இப்பொழுதெல்லாம் மக்களும் தியேட்டருக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அத்தகைய தயக்கத்திற்கு முதல் காரணம் டிக்கெட் விலையை விட பாப்கார்ன் மற்றும் பார்க்கிங் விலை அதிகமாக இருப்பதுதான். ஒரு சாமானிய மனிதன் எப்படி ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து படம் பார்க்க முடியும்? அதனால்தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை மக்கள் நாடுகின்றனர்.

இந்த கொரோனா கால கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஃபெப்சி தொழிலார்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என்று அனைவருமே இந்த 5 மாத காலமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்பதை அனைவரும் அறிவோம். இப்பொழுதுதான் மத்திய அரசு திரைத்துறைக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. நமது தமிழக முதல்வருக்கு திரையரங்கை திறப்பது குறித்து கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் அவரும் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து நல்ல பதிலை கூறுவார் என்று நம்புகிறோம்.

ஆனால் அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று அனைவரும் கலந்து ஆலோசித்து பிரச்சனைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். 30 முதல் 50 சதவிகிதம் சமூக இடைவெளியுடன் தியேட்டரில் மக்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு இருக்கும். இந்த நிலையில் அதிகப்படியான நாட்களுக்கு படத்தை திரையில் ஓட்டுவது என்பது கடினம்.

நல்ல திரைப்படங்களுக்கே தியேட்டர் கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் திரையிட்டால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தையே அடைவர். குறைந்தது ஒரு திரைப்படம் நான்கு வாரமாவது திரையிடப்பட வேண்டும். தயாரிப்பாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணையதளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

எடுத்து முடிக்கப்பட்டு பல திரைப்படங்கள் திரைக்கு வராமல் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தால் தான் அடுத்தடுத்து அந்த தயாரிப்பாளர் படம் எடுக்க முடியும். இதனால் தான் பல ஆயிரம் தொழிலாளர்களும் பயன் பெறுவர். பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வுகாண வேண்டும். அதைவிடுத்து பிரச்சனையை வெறுபக்கம் திருப்புவது தவறு.

சமீப நாட்களில் ஓடிடிக்கு எதிரான பிரச்சனையை திரு.சூர்யா அவர்களுக்கு எதிராக தனி நபர் பிரச்சனையாக திசை திருப்புவது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதில் உள்ள அரசியலையும் நான் அறிவேன். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒரு சிலரே, அதில் திரு.சூர்யாவும் குறிப்பிடத் தகுந்தவர். திரு.சூர்யா மற்றும் பெரிய நடிகர்களது படம் ஓடிடியில் வரக்கூடாது, திரையில் தான் வரவேண்டும் என்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்றாகும். அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் வெளியிட முன்வருவீர்களா, போராடுவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அனைத்து படைப்புகளையும் ஒன்றாக பார்க்கவேண்டும். என் நண்பர் திரு.சிவக்குமார் அவர்களின் வளர்ப்பும் வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். திரு.சூர்யா, திரு.கார்த்தி இருவரும் என்வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள். அவர்களின் மனிதநேயமும் ஒழுக்கமும் நான் அறிவேன். இவர்கள் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டு பிள்ளைகள். பெருமைப்படுங்கள். இவர்களை மட்டுமல்ல எந்த ஒரு தனி நபரையும் காயப்படுத்தாதீர்கள். மனது வலிக்கிறது. தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால் தான் நம்பி உள்ளவரது வாழ்வும் செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணத்தில் திரு.சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும். திரு.ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து சுதா கொங்கரா இயக்கத்தில் திரு.சூர்யா மிரட்டியுள்ள “சூரரை போற்று” திரை முன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் “சூரரை போற்று” முத்திரைப் பதிக்கும்.. தமிழனைப் போற்றும்.. வாழ்த்துக்கள் அன்புடன் பாரதிராஜா என்று கூறி சூர்யாவின் முடிவை ஆமோதித்துள்ளார் பாரதிராஜா.

%d bloggers like this: