October 28, 2020

பாலாவின் “விசித்திரன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!!!

தமிழ் திரைத்துறையில் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு பல நல்ல திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கமர்ஷியல் வட்டாரங்களிலிருந்து வேறு கோணத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் இயக்குநர் பாலா.

தனது திரைக்கதையின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர். பல வெற்றிப்படங்களை இயக்கி விருதுகளையும் குவித்தவர். அவரது படத்திற்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

இயக்கம் மட்டுமின்றி பி ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் மலையாள இயக்குநர் பத்மநாபன் இயக்கத்தில் ஷார்க்9 பிக்சர்ஸ் உடன் இணைந்து “விசித்திரன்” என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார் பாலா.

இதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு சசிகுமார் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் பாலா அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“விசித்திரன்” திரைப்படத்தில் ஆர்.கே.சுரேஷுடன் இணைந்து பூர்ணா, மதுஷாலினி, வெற்றி என்று பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளங்களில் இன்று வெளியிடுவார் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் “விசித்திரன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினர்களை டேக் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

இதை பார்த்த அவரது ரசிகர்களும் விசித்திரன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இத்திரைப்படம் இயக்குநர் பத்மநாபன் இயக்கத்தில் மலையாள மொழியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘ஜோசப்’ திரைப்படத்தின் ரீமேக் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

%d bloggers like this: