October 31, 2020

அருண்ராஜா காமராஜின் 3வது தனிப்பாடல் “கண்மணியே” வெளியானது!!!

தமிழ் திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், நகைச்சுவை கலைஞர், இயக்குநர் என பன்முக திறமைக்கொண்டு விளங்குபவர் அருண்ராஜா காமராஜ்.

‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’, ‘மரகத நாணயம்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்த அருண்ராஜா காமராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி மற்றும் பாடி உலகளவில் அறியப்பட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான, ‘கனா’ படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்குநர் அவதாரம் எடுத்தார். சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் அருண்ராஜா காமராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா ஊரடங்கின் போது தன்னுடைய ஏ.ஆர்.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் யூ டியூப் சேனல் வழியாக முன்னதாக ‘கண்ணக்குழி அழகே’ என்ற இசை ஆல்பத்தை அவரே இயக்கி பாடல்வரிகளையும் எழுதி வெளியிட்டார். அதில் கணேசன் சேகர் அவர்கள் இசை அமைக்க, பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் பாடலை பாடினார். இந்த பாடல் வைரலாகி ஹிட்டான நிலையில் அவர் அண்மையில் ‘சே’ என்ற மற்றொரு பாடலையும் வெளியிட்டு அசத்தினார்.

அதன்பின், தனது 3வது பாடல் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, நடிகர் பரத் நேற்று தன் டிவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.கே எண்ட் கம்பெனியின் 3வது தனிப்பாடலான “கண்மணியே” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, ஆடியோ இன்று வெளியாகும் என்று கூறியிருந்தார். இதில் நடிகர் பரத் மற்றும் கிருத்திகா பாபு நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கணேசன் சேகர் இசையில் பாடலை எழுதி, பாடி இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.

அதனை தொடர்ந்து, அருண்ராஜா காமராஜ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது ஏ.ஆர்.கே எண்ட் கம்பெனியின் 3வது தனிப்பாடலான “கண்மணியே” ஆடியோவை வெளியிட்டு அதன் இணைப்பையும் பகிர்ந்துள்ளார். மேலும் ரசிகர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளார்.

இதற்கு முன் வெளிவந்த இரண்டு பாடல்களுமே மாபெரும் வெற்றியடைந்த நிலையில், இப்பாடலும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: